மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்
நெல்லை டவுனில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்;
நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 71). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மீனா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் டவுன் பகுதியை சேர்ந்த 2 பேர் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.