திருச்சி ரவுடி கொலை வழக்கில் 2 பேர் கைது

திருச்சி ரவுடி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-17 18:45 GMT

ரவுடி கொலை

திருச்சியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு வழக்கு தொடர்பாக ஜாமீனில் கையெழுத்து போடுவதற்காக கடந்த 12-ந் தேதி கோர்ட்டுக்கு இளவரசன் வந்தார். பின்னர் கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு புதுக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், இளவரசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 பேர் கைது

இந்த நிலையில் ரவுடி இளவரசன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சங்கர் (21), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, 'திருச்சியை சேர்ந்த 2 ரவுடிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இளவரசன் களமிறங்க முயன்றதாக தகவல் வெளியானதால், எதிர்தரப்பினர் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்