பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சங்கிலி பறிப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் கிராமம் கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கனிமொழி(வயது 29). இவர், கடந்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 29-ந் தேதி மாலை கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு ஸ்கூட்டரில் தனது தோழியுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கொரநாட்டுகருப்பூர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலை ரவுண்டானா அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள், கனிமொழி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கனிமொழி புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமல் கிராமம் கோழியூர் மணல்மேடு தெருவை சேர்ந்த கவுதமன் மகன் சிவசங்கரன்(20), தாராசுரத்தை அடுத்த அம்மாப்பேட்டை குடியானத்தெருவை சேர்ந்த உலகநாதன் மகன் ஜெகதீஷ்(21) ஆகிய இருவரும் சேர்த்து கனிமொழியிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது.
6 ஆண்டுகள் சிறை
இதையடுத்து தலைமறைவாகி இருந்த சிவசங்கரன், ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சிவசங்கரன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கினார்.