கேரளாவில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது - சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிக்கினர்
கேரளாவில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிக்கினர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை அவுராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை, சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில்குமரேசன் மேற்பார்வையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலின் எஸ்.10 பெட்டியை சுற்றி வளைத்து அதில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இது குறித்து நடந்த விசாரணையில், கேரளா மாநிலம் திருச்சூரில் கடந்த 17-ந்தேதி வீடு புகுந்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சேக் மக்புல் (வயது 31) மற்றும் முகமது கவுசர் சேக் (51) ஆகிய இருவரும் அவுராவில் இருந்து சென்னை வரும் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருவது குறித்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சூர் போலீசாரும், உடனடியாக சென்னை வந்தனர். அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.