ரூ.2¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கடலூரில் நடந்த சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.2¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

Update: 2022-12-19 18:47 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நல்லாட்சி வாரம் நேற்று முதல் வருகிற 25-ந்தேதி வரை கடை பிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்-அமைச்சரின் முகவரி துறையின் கீழ் சிறப்பு குறைதீர்வு கூட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மொத்தம் 652 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் காதொலிக்கருவி 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,780 வீதம் மொத்தம் ரூ.5,560 மதிப்பீட்டிலும், சி.பி. நாற்காலிகள் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,500 வீதம் மொத்தம் ரூ.11 ஆயிரம் செலவிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் சலவைப்பெட்டி 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,018 வீதம் ரூ.30 ஆயிரத்து 108 செலவிலும், தையல் எந்திரம் ஒருவருக்கு ரூ.5,580 செலவிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 403 மதிப்பீட்டிலான காசோலைகள் என ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 651 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 14 திருநங்கை பயனாளிகளுக்கு நல வாரிய அடையாள அட்டையையும், தாட்கோ மூலம் தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டைகளை 9 பேருக்கும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்