பெண்ணாடத்தில் தனித்தனி விபத்து:மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் சாவு

பெண்ணாடத்தில் நடந்த தனித்தனி விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-25 18:45 GMT


பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரமேஷ் (வயது 40). தொழிலாளி. சம்பவத்தன்று இரவு, முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர், சைக்கிள் மீது மோதினார்.

இதில், படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். இது குறித்து ரமேஷின் மனைவி வீரம்மாள் (35) அளித்த புகாாின் பேரில், பெண்ணாடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று, பெண்ணாடம் சோழ நகரை சேர்ந்தவர் வீரன் (52). தொழிலாளி. சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி வழங்கினர். இதை வாங்குவதற்காக வீரன் நடந்து சென்றார். அப்போது, அவருக்கு எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீரன் மனைவி சுமதி (42) கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்