கோர விபத்தில் 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
நான்குவழிச்சாலையின் மறுபுறம் மீன் லாரி பாய்ந்து காரில் மோதிய கோர விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
நான்குவழிச்சாலையின் மறுபுறம் மீன் லாரி பாய்ந்து காரில் மோதிய கோர விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மறுபுறம் பாய்ந்த லாரி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது59). இவரது மகன் அண்ணாமலை. மதுரை வளர்நகரில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அண்ணாமலையின் மனைவி சிந்தியாவை பார்க்க சுப்பிரமணியன், அவரது மனைவி நித்யா தேவி (56), மகள் மலையரசி (27), இவருடைய குழந்தைகள்சிவகுரு (4), குருதேவ் (2) ஆகியோர் காரில் சென்றனர்.
காரை சிவகாசியை சேர்ந்த சூரியபிரகாஷ் ஓட்டினார். சிந்தியாவை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வேலாயுதபுரம் விலக்கில் வந்த போது, மீன் ஏற்றுவதற்காக மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற மினி லாரி திடீரென நான்கு வழிச்சாலையின் மறுபக்கம் பாய்ந்து சுப்பிரமணியன் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
2 பேர் பலி
இந்த விபத்தில் நித்யா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடைேய மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே டிரைவர் சூரிய பிரகாஷ் பலியானார். காயமடைந்த மற்ற 4 பேருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் மீன் லாரி டிரைவர் சகாயசுந்தர் (46) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.