திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் பலி 72 பேர் காயம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் பலியானார்கள். 72 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-27 18:45 GMT

திருப்பத்தூர்

கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் பலியானார்கள். 72 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மாணிக்க நாச்சி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைெபறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முனியையா கோவில் அருகே உள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

2 பேர் சாவு

இதில் திடலில் 241 மாடுகள் அவிழ்க்கப்பட்டன. 100 மாடுபிடி வீரர்கள் களத்தில் உறுதிமொழி ஏற்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனர்.

கண்மாய் பகுதிகளில் ஆங்காங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டள.

பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் காளை முட்டியதில் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் தேவகோட்டை அருகே உள்ள தாளிச்சாஊருணி பகுதியைச் சேர்ந்த ஆதியான் மகன் பாண்டி (32) என்பவரும் காளை முட்டியதில் பலத்த காயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

72 பேர் காயம்

மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மேலும் 72 பேர் காயம் அடைந்தனர். இதில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்