2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு
2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணம்,செல்போன் திருட்டு
வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது50). இவரது மனைவி செல்வராணி (45) இருவரும் தொழிலாளிகள். நேற்றுமுன்தினம் காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிறகு வேலை முடிந்து 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது.
இதை அறிந்த செல்வராணி பீரோவை பார்த்தபோது அதில் இருந்த ரூ.10 ஆயிரமும், வீட்டின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நகை திருட்டு
இதேபோல் பச்சாபாளையத்தை சேர்ந்த கருணாகரன் மகன் மகேஸ்வரன் (30). இவர் வெள்ளகோவிலில் டெய்லராக வேலை செய்து வருகின்றார். இவர் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் நேற்று முன்தினம் சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1¼ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2 வீடுகளில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
==========