சினிமா வினியோகஸ்தர் அலுவலக ஊழியர்கள் 2 பேரை கடத்தி தாக்குதல் - 5 பேர் கும்பல் கைது

யோகிபாபு படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட பணத்தகராறில் சினிமா வினியோகஸ்தர் அலுவலகத்தில் புகுந்து ஊழியர்கள் 2 பேரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-07 07:39 GMT

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் மதுராஜ் (வயது 39). சினிமா பட வினியோகஸ்தர். இவர் விருகம்பாக்கம் ஏ.வி.எம்.அவென்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இங்கு போரூர் பகுதியை சேர்ந்த கோபி (37) மற்றும் பென்சர் (33) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கோபி மற்றும் பென்சர் ஆகியோரை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களை காரில் கடத்தி சென்றனர். பின்னர் 2 பேரையும் தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரத்தை பறித்து விட்டு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது தொடர்பாக மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் காயம் அடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், இது தொடர்பாக வண்டலூரை சேர்ந்த நாகராஜ் (42), வினோத்குமார் (36), பிரசாந்த் (23) உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இது சம்பந்தமாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த 'ஷூ' என்ற திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வெளியிடுவதற்கும், சேட்டிலைட் உரிமத்திற்காகவும் பட தயாரிப்பாளரான கார்த்திக் என்பவரிடம் வினியோகஸ்தர் மதுராஜ் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு பேசி ரூ.17 லட்சத்தை முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மீதி தொகையான ரூ.93 லட்சத்தை 2 தவணைகளாக கொடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுராஜின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மதுரை சென்றிருந்ததாகவும், இதனால் மீதி பணத்தை கொடுக்க கால தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பட தயாரிப்பாளர் கார்த்திக் தனது கூட்டாளிகள் 10 பேர் கொண்ட கும்பலை மதுராஜ் அலுவலகத்துக்கு அனுப்பி கத்திமுனையில் ஊழியர்ளை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான போலீசார், வழக்கில் தொடர்புடைய வக்கீல் உள்பட 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள பட தயாரிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட மேலும் சிலரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்