பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 22 பவுன் நகையை திருடிய 2 ஊழியர்கள் கைது

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 22 பவுன் நகையை திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-05 05:13 GMT

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 75). இவர் தனது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை எழும்பூருக்கு வந்தார். அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது உடைமைகளை சோதித்தார். அப்போது, 22 பவுன் நகைகள் அடங்கிய பை ஒன்றை தவறவிட்டது தெரியவந்தது. இதனால், பதற்றம் அடைந்த பாண்டியன் இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

புகாரின்பேரில், எழும்பூர் ரெயில்வே போலீசார், அவர் பயணித்த ரெயிலின் ஏ.சி.பெட்டியில் சோதனை செய்தனர். ஆனால், அந்த பையை கண்டுபிடிக்க முடியவில்லை. இது ரெயில்வே போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தங்க நகைகளை ரெயிலில் தவறவிட்டதாக உறுதியாக தெரிவித்தனர்.

பின்னர், ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கும் 2 ஒப்பந்த பணியாளர்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, 22 பவுன் தங்க நகைகளை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, செங்கல்பட்டை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 23), திண்டுக்கல்லை சேர்ந்த லோகராஜ் (வயது 27) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்