பொங்கலூர் அருகே மின் கம்பம் ஏற்றிச்சென்ற பொக்லைன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்2 பேர் உயிரிழந்தனர். கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70). இவரும், அதே ஊரைச் சேர்ந்த சவுண்டப்பன் என்பவரது மகன் சக்திவேலும் (40) நேற்று கணபதிபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாவிபாளையம் அருகே உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அவர்கள் வாவிபாளையம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக தோட்டத்திற்குள் இருந்து மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு பொக்லைன் வாகனம் ஒன்று திருப்பூர்-தாராபுரம் சாலையில் ஏறியது. பொக்லைன் எந்திரத்தில் கட்டப்பட்டிருந்த மின்கம்பங்கள் பொக்லைனை கடந்து முன்னால் நீண்டு கொண்டிருந்தது. மின் கம்பத்துடன் பொக்லைன் பிரதான சாலைக்கு திடீரென்று வந்ததால் நிலைதடுமாறிய இருவரும் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீதும், பொக்லைன் எந்திரம் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இருவரின் உடல்களும் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஆங்காங்கே கிடந்தது பரிதாபமாக இருந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.