நாள்தோறும் 2½ கோடி பேர் ரெயிலில் பயணம்

இந்தியா முழுவதும் நாள்தோறும் 2½ கோடி பேர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள்் என்று திருச்சி ரெயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் கூறினார்.

Update: 2023-07-13 20:22 GMT

பட்டுக்கோட்டை:

இந்தியா முழுவதும் நாள்தோறும் 2½ கோடி பேர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள்் என்று திருச்சி ரெயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

முதல் ரெயில்வே மந்திரி கும்மட்டித்திடல் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பள்ளி சேவை அமைப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரெயில் விழிப்புணர்வு கருத்தரங்கம் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ருத்ராபதி, பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் விவேகானந்தம் வரவேற்றார்.

ரெயிலில் 2½ கோடி பேர் பயணம்

இதில் திருச்சி ரெயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் கலந்து கொண்டு ரெயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அதை பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி பெற்றுக்கொண்டார்.பின்னர் ஹரிகுமார் பேசியதாவது:-

இந்தியன் ரெயில்வே லாப நோக்கற்ற போக்குவரத்து நிறுவனம். ஒரு சேவை நிறுவனம் ஆகும். இந்தியன் ரெயில்வே மூலம் இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு 2½ கோடி பேர் பயணம் செய்கின்றனர்.ரெயில் போக்குவரத்தால் தொழில் வளர்ச்சி அடைகிறது. மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ரெயில்வே துறை மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

கொரோனா காலத்தில் உணவு, மருந்து பொருட்களை இடைவிடாது கொண்டு சென்றது. ரெயில் பயணம் பாதுகாப்பானது. பள்ளி மாணவர்கள், இந்தியன் ரெயில்வே பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ரெயில்வேயின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பள்ளி மாணவர்கள் விடுமுறை காலங்களில் ரெயில் தண்டவாளங்களில் விளையாடுவது, இரவில் படுத்து உறங்குவது, கற்கள், டயர்களை வைப்பது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. இதுதண்டனைக்குரிய குற்றமாகும்.

செல்பி எடுக்க கூடாது

ரெயில் மற்றும் ரெயில் பாதைகளில் நின்று செல்பி எடுக்க கூடாது. அரசு வேலை வாய்ப்புகளுக்கும் மற்றும் ரெயில்வே துறை வேலை வாய்ப்புகளுக்கும் தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ரெயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பெத்துராஜ், பட்டுக்கோட்டை ரெயில் நிலைய அதிகாரி மருது பாண்டியன் ஆகியோர் பேசினர். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் துணைச்செயலாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்