123 மாணவர்களுக்கு ரூ.2¾ கோடி கல்விக்கடன்-துணை சபாநாயகர் வழங்கினார்

திருவண்ணணாமலையில் 20-க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்து நடத்திய முகாமில் 123 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் கடனுதவியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

Update: 2023-08-11 18:32 GMT

திருவண்ணணாமலையில் 20-க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்து நடத்திய முகாமில் 123 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் கடனுதவியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

மாபெரும் கல்விக்கடன் முகாம்

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. அதில் 20-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்தியன் வங்கியின் திருவண்ணாமலை மண்டல மேலாளர் அருண்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் 123 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான கல்வி கடனுதவியினை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வித்துறையின் மூலமாக 'நான் முதல்வன்' திட்டத்தை முதல்- அமைச்சர் செயல்படுத்தி எப்படி ஆய்வு செய்து அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நிலையிலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் எல்லா பகுதி மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு கல்லூரியில் கல்விகடன் முகாம் இன்றைக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சியை போல வேறு எந்த மாநிலத்திலாவது இவ்வளவு சலுகைகள் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படுகிறதா என்றால் இல்லை. குறைவான 8.2 சதவீதம் வட்டியில் இந்த கல்வி கடன் வழங்கப்படுகிறது.

நமக்கு கடன் கொடுத்து நம்மை ஒரு சிறந்த வேலைக்கு செல்ல உறுதுணையாக இருந்தது இந்த வங்கி தான் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அந்த கடன்களை கட்டக்கூடிய எண்ணத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழகம் பல வளர்ச்சிகள் அடைந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வளர்ச்சிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெற்றோர்களும் கல்வி கடனை பெறக்கூடியவர்கள் நீங்களும் அதை திரும்ப செலுத்தக்கூடிய மனப்பான்மையோடு கடன்களை பெற வேண்டும். சாதாரண ஏழை, எளிய மக்கள் எல்லாரும் அவர்களுடைய குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனக்கீர்த்தி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அனைத்து வங்கி சார்ந்த அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்