கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி
வாணியம்பாடி அருகே நீச்சல் பழக கிணற்றுக்கு சென்ற 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே நீச்சல் பழக கிணற்றுக்கு சென்ற 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
கல்லூரி மாணவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள சுண்ணாம்பு பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மகன் தனுஷ் (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். மகனின் படிப்புக்காக வேலு தனது குடும்பத்தினருடன் சென்னை வடபழனிக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு இவர்களது பக்கத்து வீட்டில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரது மகன் ராகுல் (20) கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
தனுஷின் பாட்டி நாகம்மாள் சுண்ணாம்புபள்ளம் கிராமத்திலேயே வசித்து வருகிறார். தீபாவளி கொண்டாடுவதற்காக ராகுலை தனுஷ் தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
நீச்சல் பழக...
இருவரும் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சாமு என்பவரின் விவசாய கிணற்றில் நீச்சல் பழக இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அது குறித்து ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து இருவரையும் தண்ணீருக்குள் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தனுஷ், ராகுல் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். அவர்களை தீயணைப்பு படையினரால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
பின்னர் இருவரின் உடல்களும் ஆலங்காயம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி கொண்டாட வந்த இவர்கள் இருவரும் கிணற்றில் நீச்சல் பழக சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.