தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது

கந்தம்பாளையம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-12 18:45 GMT

கந்தம்பாளையம்

நகை, பணம் திருட்டு

கந்தம்பாளையம் அருகே கோதூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 79). தொழிலாளி. இவரது மனைவி நல்லம்மாள் (75). நேற்றுமுன்தினம் காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்றார். அவரது மனைவி நல்லம்மாள் அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்ல வீட்டை தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு சென்றார்.

இந்தநிலையில் மர்மநபர்கள் 3 பேர் காளியண்ணன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதில் 2 பேர் அவரது வீட்டுக்குள்ளும், ஒருவர் வெளியிலும் இருந்தனர். திடீரென காளியண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து மர்மநபர்கள் 2 பேர் வெளியில் வந்தனர். அதை பார்த்த காளியண்ணன், நீங்கள் யார் என்று கேட்டார். மர்மநபர்கள் 2 பேரும் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.19 ஆயிரத்தை திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

2 பேர் கைது

வெளியில் நின்றுகொண்டிருந்த நபர் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். இதைபார்த்த காளியண்ணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்தார். இதில் அவர் காயம் அடைந்்தார். பின்னர் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் நடத்தி விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வேஹல்லியை சேர்ந்த ராமன் மகன் ராஜ்குமார் (30) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தொட்டியம் தோட்டம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை நல்லூர் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது காளியண்ணன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த பூபதி மகன் விக்கி என்கிற விக்னேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய செருக்கலையை சேர்ந்த சுரேஷ் (34) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்