அரசின் இலவச வேட்டி, சேலை திருடிய 2 பேர் கைது
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசின் இலவச வேட்டி-சேலை திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது அந்த பகுதியில் இருந்த போலீசார் ஆட்டோ மடக்கி சோதனை நடத்தினர். ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் சோதனை நடத்தியதில் 11 மூட்டைகளில் அரசின் இலவச வேட்டி, சேலைகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாய் துறையினர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள 800 சேலைகள் மற்றும் 400 வேட்டிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலுகா அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுாிந்து வந்த துவாரகேசன், ஆட்டோ டிரைவர் பரசுராமன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.