நகைக்கடையில் திருடிய 2 பேர் கைது
பாப்பாரப்பட்டியில் உள்ள நகைக்கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
பாப்பாரப்பட்டி
திருட்டு
பாப்பாரப்பட்டி கடை தெருவில் கடந்த 7-ந் தேதி இரவில் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் திருடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தலின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் ரவித்திரி வெங்கடேஷ் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு படையினர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.
வெள்ளி பொருட்கள் மீட்பு
இதையடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட காரிமங்கலம் அருகே உள்ள மூக்கனூரை சேர்ந்த பவுன்ராஜ் மகன் மாதேஷ் (வயது 19) மற்றும் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்கூடபட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சிவா (20) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் சிவா என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.