பிப்ரவரி 1-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் - ஓய்வுபெற்ற ஆசிரியர் கூட்டணி
சென்னை சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாநில ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கூட்டம் செங்கல்பட்டு நகராட்சி சமூதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு அருமைநாதன் தலைமை தாங்கினார் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். கலாவதி வரவேற்றார். மாநில பொருளாளர் குணசேகரன், மாநில துணைத்தலைவி முகுந்தவேணி, மாநில தலைவர் சங்கர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையாளர் ரத்னா பரிந்துரைத்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம், அகவிலைப்படி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேற்கண்ட தீர்மானங்களை அரசு போர்க்கால அடிப்படையில் வரும் 2023 நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி் சென்னை சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு மறியல் செய்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.