பரங்கிமலை ராணுவ மையத்தில் பயிற்சி நிறைவு: இந்திய ராணுவத்தில் புதிதாக 197 அதிகாரிகள் சேர்ப்பு

பரங்கிமலை ராணுவ மையத்தில் பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து இந்திய ராணுவத்தில் புதிதாக 197 அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.;

Update:2023-09-10 03:03 IST

11 மாத பயிற்சி

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்தது. பயிற்சியை அவர்கள் முடித்தது தொடர்பான அணி வகுப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஓ.டி.ஏ. மையத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பயிற்சி பெற்ற அதிகாரிகளை இந்திய ராணுவத்தில் முறையாக சேர்ப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராணுவ அணிவகுப்பு மூலம் முறையாக அவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.

அந்தவகையில் இந்திய ராணுவத்தில் புதிதாக 197 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 161 ஆண்கள், 36 பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் நேற்றிலிருந்து இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களைப் போல் நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகளும், 8 பெண் அதிகாரிகளும் அவர்களின் பயிற்சியை ஓ.டி.ஏ.யில் நிறைவு செய்துள்ளனர்.

தலைமை தளபதி

11 மாத பயிற்சிக்குப் பிறகு தேர்ச்சி பெற்ற அதிகாரிகளை இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் முறையாக சேர்ப்பதற்காக நேற்று நடந்த அணி வகுப்பை ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.

பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட பயிற்சி அதிகாரி நக்கா நவீனுக்கு ராணுவ தலைமை தளபதி கவுரவ வாளை வழங்கி சிறப்பித்தார். அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தங்கப்பதக்கத்தை சுதீப்குமார் சாகுவுக்கும், வெள்ளிப்பதக்கத்தை துஷ்யந்த் சிங் செகாவத்துக்கும், வெண்கலப்பதக்கத்தை ஜோதி பிஷ்ட்டுக்கும் ராணுவ தலைமை தளபதி வழங்கி சிறப்பித்தார்.

அறிவுரை

பின்னர் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பேசும்போது, 'பயிற்சி மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆற்றியுள்ள ஒப்பற்ற பணி பாராட்டுக்குரியது. தேசத்திற்கான தன்னலமற்ற சேவை என்ற முக்கிய விழுமியத்தை எப்போதும், தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் கடைப்பிடித்து, அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்க பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்