குரூப்-4 தேர்வை 19,039 பேர் எழுதுகின்றனர்
குரூப்-4 தேர்வை 19,039 பேர் எழுதுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை குரூப்-4 தேர்வை 64 மையங்களில் 19,039 பேர் எழுதுவுள்ளனர். மேலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையத்திற்கும் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது.
இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 22 முதன்மை கண்காணிப்பாளர்களும், 22 நடமாடும் குழு மற்றும் 4 துணை ஆட்சியர் தலைமையில் பறக்கும் படை குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தேர்வு மையத்தின் பொறுப்புகளை 1 முதன்மை கண்காணிப்பாளர் மேற்கொள்வார். 20 பேருக்கு ஒரு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு தேர்வு மையத்தில் 400 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 1 தேர்வு மையத்திற்கு 1 ஒளிப்பதிவாளர் வீதம் 64 தேர்வு மையத்திற்கு 64 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து தேர்வு மையத்திற்குள்ளும் மற்றும் தேர்வு மையத்திற்கு வெளியிலும் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள், என்றார்.