குமரியில் 1.90 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்கிறார்கள்

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் 1.90 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள்.

Update: 2023-06-11 18:45 GMT

நாகர்கோவில், 

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் 1.90 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் 12-ந் தேதியும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையில் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதே போல குமரி மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் என மொத்தம் 1,230 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 687 உள்ளன. இந்த பள்ளிகளில் 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகள் திறப்பையொட்டி 1.90 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளி செல்ல உள்ளனர்.

அதே போல 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களும் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

முன்னேற்பாடுகள்

முன்னதாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு சிரமம் இன்றி சென்றுவர தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்களில் மாலை நேரங்களில் கடுமையான கூட்ட நெருக்கடி இருந்தது. இதே போல ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிகளில் வளர்ந்திருந்த முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் மேஜை, நாற்காலிகளில் படிந்திருந்த தூசிகள் சுத்தம் செய்யப்பட்டன. கரும்பலகை தயார் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்தது. அதோடு இன்றே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்