பிளஸ்-1 பொதுத்தேர்வை 18,840 மாணவ-மாணவிகள் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 18,840 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,452 பேர் தேர்வு எழுதவரவில்லை.

Update: 2023-03-14 19:06 GMT

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவர்கள் 9,737 பேரும், மாணவிகள் 10,555 பேரும் என மொத்தம் 20,292 பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்காக மாவட்டத்தில் 97 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பாளர்கள், மைய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்பாடத்துடன் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 8,813 பேரும், மாணவிகள் 10,027 பேரும் என மொத்தம் 18,840 பேர் எழுதினர். இத்தேர்வை 924 மாணவர்கள், 528 மாணவிகள் என 1,452 பேர் எழுதவரவில்லை.

கலெக்டர் ஆய்வு

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். முன்னதாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தேர்வையொட்டி தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேட்டை தடுக்க பறக்கும்படையினர் தேர்வு மையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டனர்.

பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கில பாடத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்