கவர்னர் மாளிகை முன்பு 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்

கவர்னர் மாளிகை முன்பு 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-10 20:00 GMT

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜவாஹில்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மசோதா

ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச்சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத்தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி நிறைவேற்றியது. அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவைத்திருப்பி அனுப்பினார். கவர்னரின் இந்த நடவடிக்கை வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள மக்கள் நலன் சார்ந்த 20-க்கும் அதிகமான சட்டமுன் வடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும்.

கவர்னரை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வருகிற 17-ந்தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்