17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டெடுப்பு
வேப்பந்தட்டை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
கள ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தழுதாழை கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல்லையும், அதில் உள்ள கல்வெட்டையும் கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தழுதாழையிலிருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள 'ஔவ்வா தாத்தா கோவிலில்' (பாட்டி தாத்தா கோவில்) உள்ள பலகை சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கல்வெட்டு உள்ளது.
நினைவுக்கோவில்
இது கி.பி. 17-18-ம் நூற்றாண்டில் வள்ளுவப்பாடியின் தலைவரான சவாரு சின்னவாட் நாயக்கர் என்பவருக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கோவில் ஆகும். இங்குள்ள பலகை சிற்பத்தில், 'வள்ளுவப்பாடி நாடுடைய சவாரு சின்னவாட் நாயக்கர் கோவில்' எனும் கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு சிற்பத்தின் அமைப்பு குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்தவெளியே 'ஔவ்வா தாத்தா கோவில்' எனப்படுகிறது. பெரும் குத்துக்கல் "தாத்தா" எனவும், 1½ அடி உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் 'ஔவ்வா' (பாட்டி) எனவும் வணங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாக கருதப்பட்டு வணங்கப்படுகின்றன.
வெண் கொற்றக்குடை
கல்வெட்டு இடம் பெற்றுள்ள பலகை சிற்பத் தொகுதியில் சிவிகையில் மகாராஜ லீலாசனத்தில் (அமர்ந்த நிலை) ஒருவர் காட்டப்பட்டுள்ளார். இவரே வள்ளுவப்பாடி நாட்டுத் தலைவரான 'சவாரு சின்னவாட் நாயக்கர்' ஆகலாம். சிவிகையை முன்புறம் ஒருவரும், பின்புறம் இருவரும் என 3 ஆடவர்கள் சுமந்து செல்கின்றனர். சிவிகையின் முன்புறம் ஒருவர் வாளேந்திச் செல்ல, அடுத்தவர் வெண் கொற்றக்குடையை தாங்கியுள்ளார். இவ்வரிசையின் பின்பகுதியில் அணிகலன்கள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட அழகிய புரவியை ஆடவர் ஒருவர் அழைத்து வருகிறார்.
புரவியின் பின்னே வாளேந்திய வீரர் இடம் பெறுகிறார். 7 ஆடவர்களின் தலையும் படியச் சீவி கொண்டையிடப்பட்டுள்ளன. கழுத்தணி, தோள்வளை, கைவளை, இடைக்கச்சு, அரையாடை, தண்டை ஆகியவற்றால் ஆடவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.
வள்ளுவப்பாடி நாட்டின் (இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், முசிறி, துறையூர் தாலுகா அடங்கிய பகுதி) தலைவரான இப்பெருமகன் வன்னாட்டு பகுதிக்கு (இன்றைய பெரம்பலூர் மாவட்ட பகுதி) வருகை தந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இப்பகுதியில் எதிர்பாராதவிதமாக உயிர்நீத்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பள்ளிப்படை கோவிலாக (நினைவுக்கோவில்) இதனைக் கருதலாம்.
கல்வெட்டு சிற்பம்
கடந்த 2002-ம் ஆண்டில் இரா.கலைக்கோவன், தழுதாழையில் சிவநாதன் என்பவரின் வயல்பகுதியில் இருந்த கல்வெட்டு சிற்பத்தைக் கண்டறிந்தார். இச்சிற்பத்தில் குடையொன்றை ஏந்திய காவலரும், வாளை நிலத்தில் ஊன்றிய நிலையில் இரு ஆடவர்களும், அவர்கள் அருகே வலக்கையில் மலர் கொண்ட பெண் ஒருவரும் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பத்தின் மேற்பகுதியில் 'சவாரு சிண்ணவெடி நாயக்கர் கொடி' என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
தொண்டமாந்துறையை தழுதாழையுடன் இணைக்கும் இந்த ஒற்றையடி பாதையே, அந்நாளில் சிண்ணவெடி நாயக்கர் கொடியென அறியப்பட்டதாக கொள்ளலாம்' என அவர் குறிப்பிடுகிறார். மேலும் இக்கல்வெட்டின் எழுத்தமைதியை 17-18-ம் நூற்றாண்டாக கணித்துள்ளார்.
போயர் சமூக மக்கள்
இக்கல்வெட்டின் குறிப்பிடப்படும் 'சவாரு சிண்ணவெடி நாயக்கர் என்பாரும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'சவாரு சின்னவாட் நாயக்கர்' என்பாரும் ஒருவரே ஆகலாம். இவரை குறித்த மற்றொரு கல்வெட்டே, 'ஔவ்வா' (தாத்தா கோவில்) கல்வெட்டு எனலாம். இது போயர் சமூக மக்களின் முன்னோர் வழிபாட்டு கோவிலாகும்.
இக்கண்டுபிடிப்பின் வழி, சவாரு சின்னவெடி நாயக்கர் வள்ளுவப்பாடி நாட்டின் தலைவர் அல்லது அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் இப்பகுதிக்கு வந்த போது உயிர் நீத்ததால் அவர் நினைவாக ஒரு கோவில் எழுப்பப்பட்டது என்பதையும் அறிய வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.