இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-12-02 05:56 GMT

விழுப்புரம்,

பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விழுப்புரம் சென்றார். மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரணை பொருட்கள் வழங்கினார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு. முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர். ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசி, கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்