மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத 177 பேர் மீண்டும் விண்ணப்பம்

கோத்தகிரியில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத 177 பேர் மீண்டும் விண்ணப்பித்தனர்.

Update: 2023-09-20 21:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத 177 பேர் மீண்டும் விண்ணப்பித்தனர்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்பட்டது. இருப்பினும், விண்ணப்பித்த பெண்களில் பலருக்கு பணம் வரவில்லை. இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட மற்றும் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பெண்கள் குவிந்ததுடன், உரிமைத்தொகை பெற மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 4 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் விண்ணப்பங்களை மும்முரமாக பதிவு செய்து வருகின்றனர்.

நீண்ட வரிசை

இந்த முகாமில் நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் குறுஞ்செய்தி வராத 173 பேர் மற்றும் குறுஞ்செய்தி வந்தும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத 4 பேர் என மொத்தம் 177 பேர் மீண்டும் விண்ணப்பித்தனர்.

இதேபோன்று நேற்று காலையிலும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க தாசில்தார் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்