17 கட்சிகள் இணைந்து 2024-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - நாராயணசாமி பேட்டி

2024-ம் ஆண்டு பொது தேர்தலில் 17 கட்சிகள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2022-06-10 15:22 GMT


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனை சார்ந்த கட்சிகள் சிறுப்பான்மை மக்களை கொச்சை படுத்தி பேசி வருகின்றனர். இது உலக அரங்கில் இந்தியா தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள மற்ற மதத்தினர் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 13-ந் தேதி அமலாக்கத்துறை முன்பு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கியதில் பணபரிவர்த்தனை நடந்தாக சுப்பிரமணியசுவாமி புகார் கூறியுள்ளார். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தி எந்தவிதமான பணபரிவர்த்தனையும் தவறாக நடக்கவில்லை என வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 8 ஆண்டுகள் கழித்து அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவின் அங்கங்களாக, சேவர்களாக, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ நடந்து கொள்கிறது. 2014 முதல் இந்த அமைப்புகளை பயன்படுத்தி பாஜக பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி பொய்வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் சிபிஐக்கு நான் அமைச்சராக இருந்த போது, எந்த பொய் வழக்கும் போட்டது கிடையாது. அதேபோல் நாங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தது கிடையாது. ஆனால் பாஜகவிற்கு இது கைவந்த கலையாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. ராகுல்காந்தி, சோனியா மீது பொய்வழக்கு போட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வரும் 13-ந் தேதி அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி ஆஜராகும் போது, எல்லா மாநிலங்களிலும் உள்ள வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி 8 ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. மாறாக வேதனையான ஆட்சியாக இருக்கிறது. பொருளாதார வளர்சசி தற்போது 6 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சமையல் கேஸ் விலை ரூ.1080 ஆக உள்ளது. காய்கறி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது தான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனையாக உள்ளது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. கொரோனா காலத்தில் சிறு தொழில், குறுதொழில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 25 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் இறந்தவர்கள் 5 லட்சம் பேர் தான் என மோடி அரசு கூறுகிறது. ஆனால் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி அரசின் வேதனையை மக்களிடம் கொண்டு செல்வோம். அனைத்து தரப்பு மக்களும் மோடி ஆட்சியில் அவதிப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதை போல் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழக அரசின் மீது அண்ணாமலை ஆதாரமில்லாத குற்றம்ச்சாட்டை வைக்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் மக்கள் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். திமுக அரசை குறை கூறுவதும், பொய் சொல்வதையும் அண்ணாமலை கூறி வருகிறார்.

தமிழகத்தில் திமுக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அதை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றனர். இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் காலம் வரும். 2024-ம் ஆண்டு 17 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்