தமிழகத்தில் 1.67 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க விண்ணப்பம்- தலைமை தேர்தல் அதிகாரி

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-01 08:06 GMT

சென்னை:

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது என்.வி.எஸ்.பி, வி.எச்.ஏ என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 27.78 சதவீதம் ஆகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 6.08 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 21 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது , 'இவர்களில் 90 சதவீதம் பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். அப்போது அதிகம் பேர், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்