ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு
சாலை விபத்தில் வலதுகாலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்கிட திருச்சி கோர்ட்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
சாலை விபத்தில் வலதுகாலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்கிட திருச்சி கோர்ட்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
சாலை விபத்து
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் (வயது 37). இவர் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் விடுமுறைக்காக தனது மனைவியின் சொந்த ஊரான திருச்சி குண்டூர் ராகவேந்திரா நகருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் மனைவியின் ஸ்கூட்டரில் திருச்சி-புதுக்கோட்டை பிரதான சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் தனசேகரன் பாண்டியன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தனது வலது காலை இழந்து விட்டார்.
இழப்பீட்டு தொகை
இதனையடுத்து அவர் ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் காலை இழந்ததற்கு இழப்பீடு கேட்டு தனசேகரன் பாண்டியன் திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த திருச்சி 3-வது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 84 ஆயிரத்து 20 வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தரப்பில் வக்கீல் முத்துமாரி ஆஜராகி வாதாடினார்.