கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 16 லட்சம் வாக்காளர்கள்-வரைவு பட்டியல் வெளியீடு

Update: 2022-11-09 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 16 லட்சத்து 6 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் (பொறுப்பு) ராஜேஸ்வரி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதை உதவி கலெக்டர் சதீஸ்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 99 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 291 மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் என மொத்தம் 16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

கடந்த ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்னர், தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் இறந்த, வெளியூர் சென்ற நபர்கள் நீக்கம் செய்ததின் அடிப்படையில் புதியதாக 12 ஆயிரத்து 19 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெற உள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திட தகுதி உடையவர்கள் ஆவர். இதற்காக, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் வளாக தூதர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இளம் வாக்காளர்கள் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விண்ணப்பம்

இதே போல், தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகளின்படி வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்று கொள்ளப்பட்டு, உரிய தகுதியேற்படும் நாட்களில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

இதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்து கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி டிசம்பர் 8-ந் தேதி வரையிலும், வருகிற 12, 13, 26 மற்றும் 27-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், தாசில்தார்கள் ஜெய்சங்கர், சம்பத், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன், நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன், பா.ஜனதா மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டனி, கிருஷ்ணகிரி மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்