நகை வாங்கி ரூ.16½ லட்சம் மோசடி

சேலத்தில் உள்ள நகைப்பட்டறையில் ரூ.16½ லட்சத்துக்கு நகை வாங்கி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-06-04 22:15 GMT

செல்வபுரம்

சேலத்தில் உள்ள நகைப்பட்டறையில் ரூ.16½ லட்சத்துக்கு நகை வாங்கி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைக்கடை உரிமையாளர்

கோவை கோவிந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 45). இவர் அதேப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சேலத்தில் உள்ள நகைபட்டறையில் நகை வாங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 806 கிராம் தங்க நகையை வாங்கினார். அதன் மதிப்பு ரூ.45 லட்சத்து 11 ஆயிரத்து 300 ஆகும்.

இதற்காக அவர் 3 காசோலையை கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைப்பட்டறை மேலாளர் ரெனால்டு கிறிஸ்டோபர், ஸ்ரீகாந்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டார்.

ரூ.16½ லட்சம் மோசடி

உடனே அவர் நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து அவர் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சமும், ரூ.17 லட்சத்து 46 ஆயிரத்துக்கு 299 கிராம் நகையையும் கொடுத்தார். ஆனால் மீதமுள்ள ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தார்.

இது தொடர்பாக பலமுறை ரெனால்டு கிறிஸ்டோபர் தொடர்பு கொண்டு கேட்டபோதும் ஸ்ரீகாந்த் திரும்ப பணத்தை கொடுக்கவில்லை. இது குறித்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 2 பேரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உரிமையாளர் மீது வழக்கு

அதில் 2 மாதத்துக்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ஆனால் சொன்னபடி அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. உடனே ரெனால்டு கிறிஸ்டோபர், நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவர் பணத்தை கொடுக்கவில்லை.

உடனே அவர் இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்தை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்