குமரி மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வேண்டும்

கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-01-27 18:45 GMT

நாகர்கோவில், 

கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மீனவர்கள் கலெக்டரிடம் மனு

தேங்காப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது:-

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஐஸ் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களுடன் 20 மீனவர்கள் 3 படகுகளில் கடந்த 29-4-2022 அன்று தொழிலுக்கு சென்றனர். அதன்பிறகு மே மாதம் 21-ந் தேதி 20 பேரையும் போதை பொருட்கள் கடத்தியதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை எர்ணாகுளம் மற்றும் மட்டன்சேரி சிறையில் விசாரணை கைதிகளாக வைத்திருந்தனர்.

சிறையில் உள்ள 16 பேரை...

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 16 பேர் தாங்கள் மீன் பிடிப்பதற்காக தான் சென்றோம் என்று கூறியுள்ளனர். எங்களை மீன்பிடிக்க அழைத்து வந்து ஏமாற்றி விட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சிக்கிய 4 பேர் தான் இந்த போதை பொருட்கள் கடத்தலுக்கு உதவியுள்ளனர். 16 மீனவர்களும் எந்தவித தவறும் செய்யாதவர்கள்.

மேலும் 16 பேர் மீதும் எந்தவித தவறும் இல்லை என்று குற்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 16 பேரையும் தற்போது சாட்சி கைதிகளாக சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். இதனால் 16 மீனவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. எனவே 16 மீனவர்களை நேரடியாக கோர்ட்டு விசாரணை செய்து விடுவிக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுத்த போது சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்