ரூ.16 கோடி ஊசியை செலுத்தி குழந்தையை காப்பாற்ற வேண்டும்

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்தி காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-09-25 21:15 GMT

கோவை

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்தி காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

ரூ.16 கோடி ஊசி

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரமணகுமார்- ஜனனி தம்பதியினர் கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்துள்ள மனுவில், எங்களது 3 மாத ஆண் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் அரசிடம் இருந்து உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் ரமணகுமார் நிருபர்களிடம் கூறும்போது, "அனைத்து மருத்துவர்களும் "ஸோல்ஜன் எஸ்.எம்.ஏ." என்ற ஊசியை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்த ஊசியின் மதிப்பு ரூ.16 கோடியாகும். இந்த ஊசியை போட்டு எங்களது குழந்தையை காப்பாற்ற அனைவரும் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

வெள்ளலூர் பஸ்நிலையம்

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், "வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டிடம் சுமார் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டு 65 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டது. இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லறை தோட்டம் வேண்டும்

கோவை காருண்யாநகர் பகுதியை சேர்ந்த ஹென்றி ஜோசப் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆலாந்துறை மூங்கில் மடை பகுதியில் எனக்கு சொந்தமான 65 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில் கல்லறைதோட்டம் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்துள்ளோம். தேவையில்லாமல் யாரோ தெரிவித்த ஆட்சேபனையின் அடிப்படையில் போலீசார் உரிய முறையில் ஆய்வு செய்யாமல் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே அந்த இடத்தில் கல்லறை தோட்டம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மதுக்கரை தாலுகா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மயானத்தை சுற்றி உள்ள நிலத்தை வாங்கியவர்கள், மயானத்தை சுற்றி சுவர் எழுப்பிவிட்டனர். எனவே மயானத்துக்கு செல்ல முடியவில்லை. மாற்று இடம் ஒதுக்கிதரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கவுன்சிலர் புகார்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் அசோகபுரம் ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சதக்கத்துல்லா கலெக்டரிடம் அளித்த மனுவில், அசோகபுரம் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பஞ்சாயத்தில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வார்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை விரைந்து செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கிராவல் மண் எடுக்க எதிர்ப்பு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள அளித்த மனுவில் எங்கள் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிராவல் மண் எடுப்பதற்கும், கருங்கல் உடைப்பதற்கும் ஏல அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம் இதனை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்