1,598 இளைஞர்களுக்கு அரசுப்பணி.. நியமன ஆணையை நாளை வழங்குகிறார் முதல்-அமைச்சர்
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.;
சென்னை,
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்குகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு அலுவலர்களை தேடிச் சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், மக்களின் நலன் நாடி நாள்தோறும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திடும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்று குறை கேட்டுத் தீர்த்துவைத்திட வேண்டும் என்று விரும்பினார்.
மு.க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வகையில், அரசு நிர்வாகத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் முதல் அமைச்சர் மக்களுடன் முதல்வர் என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை கோவை மாநகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் எரிசக்தித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காவல்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் மூலம் மக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த 13 அரசுத் துறை அதிகாரிகளுடன் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 35 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் மீது மக்கள் மன நிறைவு கொள்ளும் வகையில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் பயன்பெற்ற மக்கள் முதல் அமைச்சரையும் இந்த அரசையும் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (16.2.2024 - வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில், மகத்தான வெற்றி கண்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.