1,500 கி.மீ. தூரத்துக்கு புதைவட மின்கேபிள் அமைக்க முடிவு
கோவை மாநகர பகுதியில் 1,500 கி.மீ. தூரத்துக்கு புதைவட மின்கேபிள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தர்.
கோவை
கோவை மாநகர பகுதியில் 1,500 கி.மீ. தூரத்துக்கு புதைவட மின்கேபிள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தர்.
புதைவட மின்கேபிள்
தமிழகத்தல் திறந்த வெளியில்தான் மின்சார ஒயர்கள் சென்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மழை மற்றும் புயல் நேரத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைகிறது. இதனால் தரையில் தோண்டி அதற்குள் புதைவட மின்கேபிள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவையை பொருத்தவரை முதற்கட்டமாக மாநகர பகுதியில் இந்த புதைவட மின்கேபிள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக எந்தெந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
983 மின்கம்பங்கள் மாற்றம்
கோவை மாநகர பகுதியில் உயர் அழுத்த புதைவட மின்கேபிள், தாழ்வழுத்த புதைவட மின்கேபிள் என 2 வகையாக புதைவட கேபிள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாநகர பகுதியில் மட்டும் 383 கி.மீ. தூரத்துக்கு உயர் அழுத்த புதைவட கேபிள் அமைக்கப்படுகிறது. அதுபோன்று 1200-க்கும் மேற்பட்ட கி.மீ. தூரத்துக்கு தாழுவழுத்த புதைவிட மின்கேபிள் அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை தயார் செய்ததும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அரசு அனுமதி கொடுத்ததும் நிதி ஒதுக்கிய பின்னர் பணி தொடங்கப்படும். அதுபோன்று மாநகர பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை 983 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன.
மேலும் மின்கம்பங்கள் பழுதடைந்து இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். விரைவில் அந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.