20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறை நிரப்பும் போராட்டம் 150 பேர் கைது

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கோரி கடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-05 18:45 GMT

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடலூர் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் நேற்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, தமிழ் தேசிய பேரியக்க பொது செயலாளர் வெங்கட்ராமன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

150 பேர் கைது

இதையடுத்து பொருளாளர் நாசர், துணை பொது செயலாளர் தாஜ்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கோரிக்கை குறித்து பேசினார். இதில் வேல்முருகன் எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர்கள் நாகை முபாரக், இளைஞர் அணி செயலாளர் ஹமீது ஜெகபர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, கடலூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது அலி, கடலூர் தெற்கு மாவட்ட பொருளாளர் பசுல் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்து, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்