மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

Update: 2022-08-31 22:10 GMT

திருச்சி,

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை தொடங்கியது.

150 கிலோ மெகா கொழுக்கட்டை

இதையடுத்து, காலை 9 மணியளவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், மெகா கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையொட்டி 150 கிலோ மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

இந்த கொழுக்கட்டையை நேற்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கி கொண்டு சென்று, உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.

பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் காட்சியளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

அதன் பின்னர் உற்சவர், கோவில் திருக்குள கரையில் எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்