21 கோவில்களில் ரூ.150 கோடியில் புதிய திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

21 கோவில்களில் ரூ.150 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-04-06 22:02 GMT

சென்னை,

இந்து அறநிலையத்துறை மூலம் 620-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு, தேர்களை பழுதுபார்த்தல், குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் ரூ.38.50 கோடி மதிப்பில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில் சார்பில் ரூ.7.14 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி,

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி.

பண்ணாரி மாரியம்மன் கோவில்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், எஸ்.பழையபாளையம் அங்காளம்மன் கோவிலில் ரூ.1.53 கோடி மதிப்பில் 5 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.13.42 கோடியில் ஒன்பது நிலை ராஜகோபுரம் மற்றும் கிரில்களுடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி, தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ரூ.4.56 கோடியில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, தேவதானபட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் ரூ.3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி.

பசுமடம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.3.76 கோடியில் அமாவாசை மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பில் பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை கட்டும் பணி, கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலில் ரூ.3.20 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் கோணேஸ்வர சுவாமி கோவிலில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ரூ.1.20 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி.

மின்தூக்கி அறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூவநாத சுவாமி கோவிலில் ரூ.2.10 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டும் பணி, கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவிலில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் ஏழுநிலை ராஜ கோபுரம் கட்டும் பணி,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.20 கோடியில் மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றை கட்டும் பணி மற்றும் ரூ.3.51 கோடி மதிப்பில் தார் சாலை சீரமைக்கும் பணி.

முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40.03 கோடியில் திருமண மண்டபங்கள் மற்றும் பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் கட்டும் பணி, மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ரூ.1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்தும் பணி, சென்னை உத்தண்டி பிடாரி அகிலாண்டம்மன் கோவிலில் ரூ.1.50 கோடியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி என 21 கோவில்களில் மொத்தம் ரூ.149.93 கோடி மதிப்பிலான 29 புதிய திட்ட பணிக்கான கட்டுமான பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுரு பரன், ஆணையர் முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்