இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

ேசவை குறைபாட்டை சுட்டிக்காட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2023-09-13 22:23 GMT

நாகர்கோவில்:

ேசவை குறைபாட்டை சுட்டிக்காட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

வங்கி பணியாளர்

தக்கலை சாரோடு கோவில்விளை பகுதியை சேர்ந்தவா் ரவி, ஓய்வு பெற்ற வங்கி பணியாளர். இவர் தனது பணிக்காலத்தில் ஒரு வங்கியில் வீட்டு பராமரிப்பு கடன் பெற்றார். அப்போது வீட்டை வங்கி தெரிவித்தபடி ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.12 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்தார். இதற்கான தொகையை 25-5-2016-ல் இருந்து மாதம் தோறும் செலுத்தி வந்தார். இன்சூரன்ஸ் காலம் 21-5-2026 வரை உள்ளது.

இந்த நிலையில் வீட்டின் சுவர் கடந்த 16-7-2022 அன்று மழையால் இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து இழப்பீடு தொகை பெற சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரவி விண்ணப்பித்தார். ஆனால் இன்சூரன்ஸ் தொகை மறுக்கப்பட்டு உள்ளதாக பதில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் உற்பத்தி மைய தலைவர் தாமஸ் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி நாகர்கோவிலில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வீட்டு சுவர் இடிந்ததற்கான இன்சூரன்ஸ் தொகை ரூ.4 லட்சத்தை ரவி விண்ணப்பித்த 11-8-2022 முதல் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதோடு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரமும் 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்