ஆட்டோவில் சென்ற 2 பெண்களின் 15 பவுன் நகை மாயம்

ஆட்டோவில் சென்ற 2 பெண்களின் 15 பவுன் நகை மாயமானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-07-21 08:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த கீழ்மருவத்தூர் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ரம்யா (வயது 25). பில்டிங் டிசைனராக வீட்டிலேயே வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு ரம்யா உறவினர்களுடன் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்து ஷேர் ஆட்டோ ஒன்றில் உறவினர்கள் 8 பேரும் செங்கல்பட்டு நேக்கி வந்தனர். அப்போது ரம்யா தான் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை கழற்றி நகை பெட்டியில் வைத்து அதை ஒரு கைப்பையில் போட்டுக்கொண்டு வந்தார்.

அதுபோல உடன் வந்த உறவினர் பெண் ஒருவரும் தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி ஒரு பையில் வைத்து கொண்டு ஆட்டோவில் பயணம் செய்தார்.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள் அவரவர்களின் வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கு சென்ற ரம்யா தனது பையை திறந்து பார்த்தபோது நகைப்பெட்டி திறந்த நிலையில் இருப்பதை கண்டு திடுக்கிட்டு பைக்குள் நகையை தேடினார். அதில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருந்தது.

இதுபோல ரம்யாவுடன் வந்த உறவினர் பெண்ணின் பையில் வைத்திருந்த 3 பவுன் நகையும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 15 பவுன் நகை மாயமாகி இருப்பது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் ரம்யா புகார் செய்தார்.

மேலும் தன்னுடன் வந்த 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் ரம்யா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்