முண்டியம்பாக்கத்தில்விஷ சாராயம் குடித்ததில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு62 பேருக்கு தீவிர சிகிச்சை

விஷ சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 62 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2023-05-17 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்தவர்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மரக்காணம், திண்டிவனம் அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இதுவரை ஒரு பெண் உள்பட 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கண்பார்வை பாதிப்பு

மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும், மரக்காணம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8 பேருக்கு தீவிர சிகிச்சை

மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தினர் கதறல்

சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.

போலீசில் புகார் செய்தோம்

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்பட்டிருக்காது. காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் சாராயம் விற்றனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. விஷ சாராயம் குடித்ததால் சிலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது. கண் சரிவர தெரியவில்லை என்கிறார்கள். சிலர் ஒரு சமயத்தில் நன்றாக பேசுவதாகவும், திடீரென மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்றும் பேசுகிறார்கள். இன்னும் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் எத்தனை பேருக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ? என்று தெரியவில்லை, மிகவும் அச்சமாகவே இருக்கிறது. தற்போது இருக்கிறவர்களையாவது நல்லபடியாக காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்