மின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து 15 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மின் கம்பியில் காளை மோதியதில் மின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-04-29 18:20 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

15 ேபர் காயம்

அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று வெளியேறும் பகுதியில் சென்றது. அப்போது அந்த காளை அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து இழுத்து கட்டப்பட்டிருந்த இழுவை கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் அதிக சத்தத்துடன் தீப்பொறி கீழே விழுந்தன.

அப்போது மின்கம்பம் அருகே போலீஸ் பேரிகார்டுகளை பிடித்துக் கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த ராகுல் (வயது 19), மேட்டுப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் ஆறுமுகம் (34), பழனிச்சாமி (45), சூரன்விடுதியை சேர்ந்த குமார் (38), கர்ணன் (26), குளவாய்பட்டியை சேர்ந்த சஞ்சீவி (28), சுரேஷ் (36), காட்டுப்பட்டி பழனிச்சாமி மகன் கணேசன் (27), மாங்கோட்டையை சேர்ந்த பழனிவேல் மகன் ராஜ சேகர் (29), கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் அருண்பாண்டி (31), பேராவூரணியை சேர்ந்த விஷால் (20), விக்னேஷ் (19), தோப்புப்பட்டியை சேர்ந்த அழகேசன் மகன் வசந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் முன்னையம் பட்டியை சேர்ந்த மலர்ச்செல்வன் மகன் ராகுல் (19) உள்பட 15 பேர் மீது தீப்பொறி விழுந்து காயமடைந்தனர். இதற்கிடையே தீப்பொறி ஏற்பட்டதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

மேல் சிகிச்சை

இதையடுத்து ஜல்லிக்கட்டில் வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜல்லிக்கட்டில் மின்கம்பி மீது காளை மோதியதில் தீப்பொறி விழுந்து 15 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்