ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்ட 15 கிலோ அரிசியை மீண்டும் வழங்க வேண்டும்:கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட 15 கிலோ அரிசியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்

Update: 2023-01-30 18:45 GMT

மாற்றுத்திறனாளிகள் மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 437 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பலர் வந்தனர். அவர்கள் மொத்தமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களின் மனுக்களை சிலர் மொத்தமாக சேகரித்து கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த வகையில் அவர்கள் சுமார் 100 மனுக்களை கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த மனுக்களில், "தேனி மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறோம். கடந்த 4 மாதமாக ரேஷன் கடைகளில் 15 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை ரீதியாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிறுத்தப்பட்ட 15 கிலோ அரிசியை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கிறார்கள். ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்எண்ணெய் வினியோகம் மாதம் ஒரு நாள் மட்டுமே நடக்கிறது. மண்எண்ணெய் வாங்கச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது இல்லை. மேலும் 1 லிட்டர் ரூ.15-க்கு பதில் ரூ.17 வசூல் செய்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

துப்புரவு பணியாளர்கள்

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், "டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றுகிறோம். எங்களுடைய பணி சார்ந்த பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததால் 19 துப்புரவு பணியாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மதுபான பார்

மருத்துவர் சவரத் தொழிலாளர் முன்னேற்ற சங்க சின்னமனூர் நகர தலைவர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "சவரத் தொழிலாளர்களுக்கு தேவையான தொழில் கருவிகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். அதுபோல், கடமலை-மயிலை ஒன்றியம் கரட்டுப்பட்டியில் அரசு பள்ளி அருகில் தனியார் மதுபான பார் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் புரட்சிரெட் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சின்னமனூர் ஒன்றிய துணை செயலாளர் சரவணபுதியவன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் தரமற்ற அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். க.விலக்கு இந்திரா நகரை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்