செந்நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன

எடப்பாடி அருகே ஊருக்குள் புகுந்த செந்நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன.

Update: 2022-11-11 19:30 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே ஊருக்குள் புகுந்த செந்நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன.

செந்நாய்கள்

எடப்பாடி அருகே உள்ள சித்தூர் கிராமம் ரெட்டிபட்டி எல்லை முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை அவரது விவசாய தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு, தூங்கச் சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவு நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தத்தை கேட்ட தங்கராஜ் அங்கு வந்து பார்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக வந்து, ஆடுகளை கடித்து குதறிய காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து செந்நாய்களை விரட்டினர்.

15 ஆடுகள்

பின்னர் அங்கு சென்று பார்த்தபோது ஆட்டுப்பட்டியில் இருந்த 12-க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்து கிடந்தன. மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதுகுறித்து தங்கராஜ் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை துறையினர், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே மேல் சித்தூர் கிராமத்தில் விவசாயி பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்த செந்நாய்கள் கூட்டம், அங்கு பட்டியில் இருந்த ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் 3 ஆடுகள் உயிரிழந்தன. நள்ளிரவில் சித்தூர் சுற்றுவட்டார பகுதியில் செந்நாய்களின் அட்டகாசத்தால் 15 ஆடுகள் செத்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனப்பகுதிக்குள்விட வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அப்பகுதிகள் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சித்தூர் பகுதியின் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி செந்நாய்கள் கூட்டம் வெளியேறி ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கி கொன்று வருவது வாடிக்கையாகி விட்டதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றித்திரியும் செந்நாய்களை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்