ரூ.15 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்

ரூ.15 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2023-10-25 19:00 GMT

கடையம்:

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அம்ரூத் 2.0 அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்த மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் திட்டத்தை உடனே நிறைவேற்றுமாறு சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசினார். இதனையடுத்து தமிழக அரசு அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.14.48 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் தொடங்க உத்தரவிட்டது. இதன்படி கடனாநதி நீர் ஆதாரம் மூலம் 7.38 மீட்டர் தூரம் புதிய பைப்லைன் அமைத்து 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, உறைகிணறுகள் அமைத்து 1465 வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். விழாவில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவர் ச.சரசு, துணைத்தலைவர் சு.சங்கர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அ.வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.திருச்செல்வம், இளநிலை பொறியாளர் இரா.ஜனார்த்தனபிரபு, செயல் அலுவலர் து.பூதப்பாண்டி, கட்சி நிர்வாகிகள் சௌ.ராதா, சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்