காங்கயம் அருகே ஊதியூர் பகுதியில் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரித்தல் மற்றும் அதன் மூலம் மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
கயிறு தயாரிக்கும் நிறுவனம்
காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊரக தொழில்துறையின் சார்பில் கயிறு குழுமம் பொது வசதி மையம் என்கிற வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமராவதி காயர் புரொடியூசர் நிறுவனம் செயல்படவுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக ரூ.8.75 கோடியும், பங்குதாரர்களின் தொகையாக ரூ.5.20 கோடியும் என, ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்த நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், அமராவதி காயர் புரொடியூசர் நிறுவன தலைவர் சந்திரசேகர், இயக்குர்கள் சரவணவேல், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.