காரில் கடத்தி வரப்பட்ட 141 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 141 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் கடத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 141 கிலோ 923 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்கான கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் காரில் இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடி பகுதியை சேர்ந்த கலியன் மகன் பெரியசாமி (வயது 41) மற்றும் விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியை சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் பிரசன்ன வெங்கடேஷ் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், 141 கிலோ புகையிலை பொருட்கள், 3 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.