ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தாய்-மகன்களை தாக்கிய 14 பேர் கைது

ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தாய்-மகன்களை தாக்கிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-14 20:30 GMT

சமயபுரம்:

ஒரு தலைக்காதல்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காலவாய்பட்டி ஆரியம்பாடி தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் செல்வகுமார்(வயது 19). இவர் ஒரு கல்லூரி மாணவியை, ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த மாணவியின் கண்களை போன்று தனது ஆட்டோவில் வரைந்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த மாணவியின் குடும்பத்தினர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வகுமாரை அழைத்து விசாரணை நடத்தி, உடனடியாக ஆட்டோவில் வரையப்பட்டுள்ள கண்களை அழிக்க வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

தாய்-மகன்கள் மீது தாக்குதல்

ஆனால் ஆட்டோவில் வரையப்பட்டிருந்த கண்களை அவர் அழிக்காததால் மாணவியின் தரப்பினர் ஆத்திரமடைந்தனர். மேலும் தில்லாம்பட்டியை சேர்ந்த விக்ரம்(20), சக்திவேல் மகன் சரண்(22), முத்துச்சாமி மகன் வினோத்(23), மணிவண்ணனின் மகன் கவுதம்(35), சரவணன் மகன் சுதர்சன் (19), ஆறுமுகம் மகன் பிரசாந்த் (22), தனபால் மகன் லோகேஸ்வரன் (22), மூக்கன் மகன் வேலவன்(20), ரெங்கநாதனின் மகன் குமரேசன்(28), சுப்பையா மகன் பாலு(23), ரமேஷ் மகன் பிரவீன் (24), ரெங்கநாதன் மகன் மணிமாறன் (33), கிருஷ்ணன் மகன் சதீஷ் (28), மணிகண்டன் (37) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை தட்டிக்கேட்ட செல்வகுமார், அவரது தாய் கமலம்(40), அண்ணன் கோபிநாத் (25) ஆகிய 3 பேரையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

14 பேர் கைது

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 14 பேரையும் நேற்று கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவர்களை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்