தூத்துக்குடி மாவட்டத்தில் 14¾ லட்சம் வாக்காளர்கள்

தூத்துக்குடி, ஜன.6- தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்திலுள்ள 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

Update: 2023-01-05 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்திலுள்ள 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன்படி தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, அ.தி.மு.க. துணை செயலாளர் சந்தானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜா, காங்கிரஸ் முத்துமணி, பகுஜன் சமாஜ் கட்சி மணிகண்டன், அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், பா.ஜனதா கிஷோர்குமார், தேவகுமார், தே.முதி.க. நாராயணமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

14¾ லட்சம் வாக்காளர்கள்

இதில் விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 329 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 19 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 343 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 647 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 923 பெண் வாக்காளர்களும், 73 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 643 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 944 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 969 பெண் வாக்காளர்களும், 31 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 944 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 662 பெண் வாக்காளர்களும், 8 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 716 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 633 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 64 பெண் வாக்காளர்களும், 50 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 747 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 410 பெண் வாக்காளர்களும், 34 திருநங்கைகளும் ஆக மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 569 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 18 ஆயிரத்து 724 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 52 ஆயிரத்து 23 பெண் வாக்காளர்களும், 215 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 70 ஆயிரத்து 962 வாக்காளர்கள் உள்ளனர்.

கலெக்டர் பேட்டி

மேலும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது. புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 27 ஆயிரத்து 216 மனுக்களும், பெயர் நீக்கம் செய்ய 12 ஆயிரத்து 210 மனுக்களும், முகவரி, பெயர் திருத்தம் செய்ய 12 ஆயிரத்து 295 மனுக்களும் ஆக மொத்தம் 52 ஆயிரத்து 121 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 1170 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு, 50 ஆயிரத்து 951 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆதார் எண் இணைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் 62.52 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இந்த பணிகள் தாலுகா அலுவலகங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இணையதளம் வழியாகவும் இணைக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

கல்லூரிகளில்..

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேசிய வாக்காளர் தினமான வருகிற 25-ந் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பது போன்றவை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடைபெற உள்ளது. கல்லூரிகளிலேயே முதல் மாணவ, மாணவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். 90 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்